வியாழன், 8 செப்டம்பர், 2011

யாரோடு நான் பேசுவேன்....


நிலவை விட
மெல்லிய வெளிச்சமாய்
எரிந்து கொண்டிருந்தது
ஒற்றைத் தெருவிளக்கு !

காது மடலை
குளிரச் செய்யும்
ஜில் என்ற
தென்றல் காற்று!

பனியில் நனைந்தும்
மழை வேண்டி
மந்திரம் ஓதும்
தவளைகள் சத்தம்!..

ரம்மியமான - இந்த
இராத்திரி வேளையை
ரசித்து - நான்
நடந்து வந்தேன்....

தெரு விளக்கைத்
தாண்டுகையில்
அதன் அடியிலிந்து - ஓர்
அழைப்புக் குரல்.

ஒரு குட்டி நாயின் செல்ல முனகல்.....

விரல் சொடுக்கினேன்
தலை திருப்பியது
எட்டி நடந்தேன்
தாவி தொடர்ந்தது...

கையில் எடுத்து
மார்பில் அணைத்து
கதவைத் திறந்து
வீட்டில் நுழைந்தேன்..

நடுங்கிய உடலுடன்
இடுக்கிய கண்களால்
விளக்கின் வெளிச்சத்தில்
என் முகம் பார்த்தது.

பல நாள் பழகி
வெகு நாள் பிரிந்து -
மீண்டும்
சந்தித்த இருவரின்
சந்தோஷத்தைப்போல
அது
என் முகமெங்கும்
முகர்ந்து பார்த்து
பாசமாய் நக்கியது...

என்
தலை முடியை
கவ்விப் பிடித்து
சண்டைக்கு இழுத்தது ..
கைகளில் இருந்து
இறக்கி தரையில்
விட்டேன் - அது
வீடெங்கும் ஓடியது ...

பால் ஊற்றினேன்
வேகமாய் குடித்து
இரண்டு தும்மல்
போட்டது..
யாரோ நினைக்கிறார்கள்
என்று எண்ணி
அதன் தலையில் தட்டினேன்
என் விருந்தோம்பலுக்கு
நன்றி சொல்லி
வாஞ்சையுடன் வாலாட்டியது..

கை கொடுக்கச் சொல்லி
உள்ளங்கை நீட்டினேன்
பாய்ந்து வந்து -
என்
விரலைக் கவ்வியது
வலியின் வேதனையில்
நான் குரல் கொடுக்க
தன்
நாக்கால் நக்கி
ஆறுதல் தந்தது..

ஆசையுடன்
நான்
உடம்பைத் தடவினால்
மீண்டும்
என்
விரலைக் கடித்தது..

சில நிமிட நேரங்கள்
நான்
எஜமானனாகவும்
பல மணி நேரங்கள்
நான்
பணியாளனாகவும்
பழகிட நேர்ந்தது...

இப்படியாய்
எங்கள் உறவு
சிறுக சிறுக
இறுகியது..

அதற்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று எண்ணியபடியே
நான் தூங்க -
அது
என்
காலடியில்
விழித்திருந்தது...


விடிந்ததும் பார்த்தேன் ....
தொலைந்து போயிற்று....

நடந்தது கனவோ?
என
நான் எழுகையில்
நடந்த
சம்பவங்களுக்கு சாட்சியாய்
என்
உடலெங்கும்
நகக்கீறல்கள்...

மனது வலித்தது...

அதன் பிறகு
அதை
நான்
மீண்டும்
சந்திக்கவேயில்லை...

அந்த
ஓர் இரவுக்குள்
நானும் அதுவும்
பேசிய விஷயங்கள்
பரிமாறிய நேசம்
என்
நெஞ்சில் பதிந்த
நினைவுத் தடங்கள்..

இப்போதும்
அதே தென்றல் காற்று
அதே தவளைகளின் சத்தம்
அதே ஒற்றைத் தெருவிளக்கு

ஆனால்
கடந்து போகையில்
கனத்துப் போகும்
என் இதயம்...

மௌனித்துப்போன - என்
இரவு நேரங்களில்
இனி
யாரோடு நான் பேசுவேன்.... 


என்றென்றும் அன்புடன்
இரா. கு. இராம் சுந்தர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக