செவ்வாய், 20 செப்டம்பர், 2011

வேறு தேசம் செல்லுங்கள்...

வல்லினம்,
மெல்லினம்,
இடையினம்..

இதற்கு
வளைய மறுக்கிறதா ?
உங்கள் நாக்கு !
இணைந்து
பிரிய மறுக்கிறதா ?
உங்கள் உதடுகள் !! 

கவலையை விடுங்கள்..

சிறந்த
எதிர்காலம்
சின்னத்திரையில்
உங்களுக்கு...


வேதியல்
மாற்றப் பொருளா என்ன
நம் தமிழ்
வேக வைத்து
தின்பதற்கு ..

யோசித்துப்
பார்த்ததில்
பெரும் வேதனைதான்
எங்களுக்கு..

கொலை செய்யக்
கூலி பெறும்
கலிகாலக் 
குமரிகளே..

குழந்தை மொழியின்
மழலைத் தடுமாற்றம்
யாழை விட இனிதென்பதை
பாழாய்ப் போன - நீர்
தவறாய்ப் புரிந்து
கொண்டீர்...

சிக்கனப் பேச்சு நன்று
அதனால்
' க் ' கன்னாவை
விட்டுப் பேசு என்று
கற்றுத் தந்தது
யார் இன்று? 

குறைத்தல்
என்பதை
உங்கள் உடையோடு
கொள்ளுங்கள்..
ஓங்கி உரைத்தல்
என்பதே
எம் தமிழுக்கு
அழகு..

வெட்டி வீசுதலை
உங்கள்
கேசத்தோடு
நிறுத்துங்கள்
எங்கள்
(சு)வாசத் தமிழில்
வேண்டாம்..

நேசத்தோடு  சொல்கிறோம்..

வெல்லத் தமிழை
நல்லப் படித்து
கன்னல் மொழி
பேச வாருங்கள்...

இல்லையேல் ...

வேறு தேசம் செல்லுங்கள் ..

என்றென்றும் அன்புடன்,
இரா.கு.இராம் சுந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக